குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அலைமோதினர்.;
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் தற்போது நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று அலைமோதியது.
அதிகாலை முதலே வாகனங்கள் குவிந்ததால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பணியில் இல்லாததன் காரணமாக வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செய்வதறியாது திகைத்தனர். பின்னர் வாகன ஓட்டிகளே போக்குவரத்தை சீரமைத்தனர். இருப்பினும் அப்சர்வேட்டரி முதல் கலையரங்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் களை கட்டின. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளி நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். இதேபோல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. சீசன் காலம் வரை தங்கும் விடுதிகளில் அறைகள் ஓரளவு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.