கொடைக்கானல் மலைப்பாதையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்களில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெரும்பாறை:
தென்காசியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). கார் டிரைவர். இவர், தனது நண்பர்களான ஜெய்பட்டேல், சந்திரகான் ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று தென்காசி செல்வதற்காக திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை சுப்பிரமணி ஓட்டினார். அவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்து வந்தனர்.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பண்ணைக்காடு அருகே வாழகிரி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக கார் ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார், சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுப்பிரமணி உள்பட 3 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.