நாளை தொழிலாளர் தினம்: திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு

நாளை தொழிலாளர் தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-04-30 14:02 GMT
திருவள்ளூர்,

மே மாதம் 1-ந் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 526 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் கோடை வெப்பம் தாக்கத்தின் காரணமாக 10 மணி அளவில் நடத்த வேண்டும். தொழிலாளர் தினம் அன்று நடைபெறும் இந்த கிராமசபை கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஊராட்சியில் 2201-22-ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகளில் முன்னேற்ற நிலை, ஒன்றிய, மாநில அரசு திட்டங்களான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, விவசாய மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். கிராமசபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்