திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க திட்டம்
திருவத்திபுரம் நகராட்சியில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் என்.ரகுராமன், துணைத்தலைவர் குல்சார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், நகர வளர்ச்சிக்கு கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விவாதம் நடந்தது.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் பேசுகையில், ‘நகரமன்ற உறுப்பினர்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகளை பொறுத்து கோரிக்கைகளை முன்வைத்தனர். கோரிக்கைகளின் அடிப்படையில் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவத்திபுரம் நகராட்சியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ரூ.40 கோடி அரசிடம் முன்வைக்கப்பட்டு உள்ளது. கல்வி நிதியை பொருத்தவரை பள்ளிகளுக்கு மட்டுமே செயல்படுத்த இயலும். எனவே பள்ளிகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறினால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்வாய் கட்டமைப்புக்களை ஒருங்கிணைத்து கழிவுநீரை வெளியேற்றும் வழிவகைகளை ஆராய்ந்து சீரமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றார்.
முன்னதாக ஒப்பந்தக்குழு, வரி சீராய்வு கமிட்டி உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நகரமன்ற தலைவர் மோகனவேல் சால்வை அணிவித்தார்.