ஊட்டியில் தகவல் அறியும் உரிமை சட்ட அலுவலர்களுக்கு பயிற்சி
ஊட்டியில் தகவல் அறியும் உரிமை சட்ட அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட பொது தகவல் அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் பிரதாப் குமார் பேசும் போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005- யின் கீழ் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொது தகவல் அலுவலர்களுக்கு தகவல் உரிமை சட்டம் தொடர்பாக பயிற்சி மற்றும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அலுவலகத்தில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர்கள் அல்லது அலுவலர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அந்த மாவட்டத்தில் உள்ள துறை அலுவலர்கள் ஆணையத்திற்கு நேரடியாக ஆஜராகி அவர்களது பதில் பதிவு செய்ய ஒரு சூழ்நிலையாக உருவாகிறது. குறிப்பாக வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் நேரடியாக ஆணையத்திற்கு வரும் நிலை தற்போது அதிக அளவில் ஏற்படுகிறது. மேலும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுதாரர்களின் மனுக்களை ஆய்வு செய்ய எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் .தனப்ரியா மற்றும் பொது தகவல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.