ரெயில் மோதி தொழிலாளி சாவு
திருத்தணியில் சரக்கு ரெயில் மோதி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.;
திருத்தணி,
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 41). இவர் காயலாங்கடையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும் 5 குழந்தைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த சரக்கு ரெயில் மோதியதில் மகேந்திரன் உடல் சிதறி பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.