சொத்துகளை அபகரித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை
சொத்துகளை அபகரித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம், இங்கிலாந்து பெண் புகார் மனு கொடுத்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்பவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்தில் இரட்டை குடியுரிமை உள்ளது. மேலும் எனது மூதாதையர்களின் பூர்வீக சொத்து கூடலூர் பகுதியில் இருக்கிறது. மேலும் நான் மசினகுடி பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு 2 ஏக்கர் மனையுடன் கூடிய இடத்தை வாங்கி அங்கு குடியேறினேன். அப்போது மேட்டுப்பாளையம், மற்றும் சென்னையை சேர்ந்த 2 பேரின் அறிமுகம் ஏற்பட்டது. அதில் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக, கட்டாயப்படுத்தி, கூடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்வது போல் ஏமாற்றினார். இது தொடர்ந்து சொந்த வேலை காரணமாக நான் இங்கிலாந்து சென்று விட்டு மீண்டும் இங்கு வந்தேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் 2 பேரும் எனக்கு சொந்தமான பணம் மற்றும் சொத்துகளை அபகரித்தனர். எனவே மசினகுடி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர்களிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் வருகிறது. எனவே எனது சொத்துகளை மீட்டு, கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.