கட்டுமான பொருட்களின் விலை உயர்வு இலவச வீடுகள் கட்டும் திட்டத்துக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் இலவச வீடுகள் கட்டும் திட்டத்துக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதிவாசி மற்றும் பொதுமக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கூடலூர் பகுதியில் உள்ள சில ஆதிவாசி கிராமங்களில் புதிய வீடுகள் கட்டுமான பணி தொடங்கப்பட்டு பாதியில் விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட செம்பக்கொல்லி, மணல் கொல்லி, தர்ப்பக்கொல்லி கிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் நேற்று தேவர்சோலை பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் மனுக்களை அளித்தனர். அதில் கடந்த 2 ½ ஆண்டுகளுக்கு முன்பு புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நிறைவு பெறவில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் குடிசையில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இன்னும் சில வாரங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளதால் மிகுந்த சிரமம் ஏற்படும். எனவே பாதியில் விடப்பட்டுள்ள கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொண்டு ஆதிவாசி மக்களிடம் வீடுகளை ஒப்படைக்க வேண்டும்.
இதுதவிர நாளுக்கு நாள் கட்டுமான பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதால் இலவச வீடுகள் கட்டும் திட்டத்தின் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.இது ஒரு ஆதிவாசி மக்கள் இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, புதிய வீடுகளை விரைவாக கட்டித் தரவில்லை எனில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்