தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-30 12:40 GMT
ஒளிராத தெருவிளக்குகள்

கூடலூர்-தேவர்சோலை சாலையில் உள்ள பயணியர் விருந்தினர் மாளிகை பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தெருவிளக்குகள் சரிவர ஒளிராமல் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் இரவில் நடந்து செல்லும்போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் மதுபிரியர்கள் முகாமிடும் மையமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜார்ஜ், கூடலூர்.



சுகாதார சீர்கேடு

கோவை வீரகேரளம் பள்ளி வீதியில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

குமார், வீரகேரளம்.


நால்ரோடு வழியாக பஸ்கள் செல்லுமா?

கருமத்தம்பட்டி போக்குவரத்துக்கழக கிளை சார்பில் சோமனூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையத்துக்கு செல்லும் நகர்புற பஸ்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு வழியாக செல்வது இல்லை. அந்த வழியாக பஸ்களை இயக்கினால், கருமத்தம்பட்டியை சேர்ந்த பயணிகள் மிகவும் பயன் அடைவார்கள். எனவே அதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேந்திரன், கருமத்தம்பட்டி.

குடிநீர் தட்டுப்பாடு

கோத்தகிரி சேட்லைன் மற்றும் ஹேப்பிவேலி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு கடந்த ஒரு வார காலமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் அந்த குடியிருப்புகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே பேரூராட்சி நிர்வாகம் குடிநீரை சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்தகுமார், கோத்தகிரி.

போக்குவரத்து நெரிசல்

கோவை-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பள்ளம் இதுவரை மூடப்படவில்லை. மேலும் குழாய் பதிக்கும் பணியும் நிறைவடையவில்ைல. ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே குழாய் பதிக்கும் பணியை விரைவாக முடித்து, பள்ளத்தை மூட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

அருள், தொப்பம்பட்டி.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையோரத்தில் சி.டி.சி. டிப்போ அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலை சுருங்கி வருகிறது. மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர், மேட்டுப்பாளையம்.

பழுதடைந்த ஆஸ்பத்திரி கட்டிடங்கள்

மேட்டுப்பாளைம், காரமடையில் அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளது. இதன் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றன. மேலும் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் நோயாளிகளுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த அரசு ஆஸ்பத்திரிகளில் பழுதடைந்த கட்டிடங்கள் சீரமைக்கப்படுமா?

முருகேசன்,காரமடை.

மண் மூடிய கால்வாய்

கோவை மாநகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட கற்பக விநாயகர் நகர் அருகில் சாக்கடை கால்வாய் மண் மூடி கிடக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மாரிமுத்து, கோவை.



வாகன ஓட்டிகள் அவதி

கோத்தகிரி பாண்டியன் பூங்காவில் இருந்து புதுகோத்தகிரிக்கு செல்லும் சாலையோரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தனியார் கட்டுமான பணிக்காக கொண்டு வரப்பட்ட மண் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற பொருட்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், கோத்தகிரி.


மேலும் செய்திகள்