மடிப்பாக்கம் தி.மு.க. வட்ட செயலாளர் கொலையில் திடீர் திருப்பம் - மேலும் 4 பேர் கைது
மடிப்பாக்கம் தி.மு.க. வட்ட செயலாளர் கொலையில் திடீர் திருப்பமாக ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொன்ற மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 37). தி.மு.க. வட்ட செயலாளரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையிலான தனிப்படையினர் கூலிப்படையை சேர்ந்த விக்னேஷ், புவனேஸ்வர், கிஷோர், மற்றொரு விக்னேஷ், சஞ்சய் ஆகிய 5 பேரை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கைது செய்தனர்.
இந்த வழக்கில் அருண் உள்பட 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படை தலைவன் முருகேசன், பிரபல ரவுடி கழுதி முத்துசரவணன் என இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். முதல் கட்ட விசாரணையில் மடிப்பாக்கத்தில் இருந்த நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக செல்வம் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இந்த நிலையில் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவருடன் இருந்த 188-வது வட்ட தி.மு.க. துணை செயலாளர் குட்டி என்ற உமா மகேஸ்வரன் (43), தி.மு.க. வட்ட மீனவரணி அமைப்பாளர் சகாய டென்சி (55), மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தாளர் ஜெயமுருகன் (42), மடிப்பாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியுமான ரவி என்ற ரமேஷ் (39) ஆகிய மேலும் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமுருகன் வெட்டப்பட்டார். இதில் கொலையான செல்வத்துக்கு தொடர்பு இருக்கலாம் என அவர் சந்தேகப்பட்டார். வட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரனுக்கு, வட்ட செயலாளர் பதவி மீது ஆசை. சகாய டென்சி, ரமேஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் அவர்களுக்கு செல்வம் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் 4 பேரும் சேர்ந்து முத்து சரவணன், முருகேசன் மூலமாக ரூ.40 லட்சம் கொடுத்து செல்வத்தை கொலை செய்து உள்ளனர். செல்வத்துடன் இருந்த உமா மகேஸ்வரன்தான், அவரை எங்கே வைத்து கொலை செய்ய வேண்டும் என்று சொல்லி உள்ளார்.
அதன்படி செல்வம் கொலை செய்யப்பட்ட பிறகு தனக்கு எதுவுமே தெரியாதது போல் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினருடன் செல்வத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுள்ளார்.
கைதான முத்துசரவணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் ரவுடி தணிகாசலம் என்பவர் மாதவரம் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளார். இதன் மூலம் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் மொத்தம் 14 பேர் கைதாகி உள்ளனர்.
இதன்மூலம் கடந்த 3 மாதங்களாக தி.மு.க. வட்ட செயலாளர் கொலை வழக்கில் இருந்து வந்த மர்மம் விலகியதாகவும், கொலையாளிகள் முழுமையாக கைது செய்யப்பட்டு விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலையில் துப்பு துலக்கி குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.