ஆவடி அருகே வீட்டுக்குள் பாய்ந்த துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு

ஆவடி அருகே மேற்கூரையை துளைத்தபடி வீட்டுக்குள் பாய்ந்த தோட்டாவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சி.ஆர்.பி.எப். வீரர்கள், துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது அந்த தோட்டா தவறுதலாக வீட்டுக்குள் பாய்ந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2022-04-30 11:15 GMT
ஆவடி, 

ஆவடியை அடுத்த மிட்டனமல்லி எம்.சி.ராஜா தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36), பெயிண்டர். இவர் அந்த பகுதியில் சிமெண்டு ஓடு (ஆஸ்பெஸ்டாஸ் சீட்) போட்ட வீட்டில் வசித்து வருகிறார். அவருடைய மனைவி, குழந்தையுடன் ஆவடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டதால் ராஜேஷ் மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று காலையில் எழுந்த ராஜேஷ், சுவரில் மாட்டி இருந்த சட்டையை எடுத்த போது அதில் இருந்து ஒரு துப்பாக்கி தோட்டா கீழே விழுந்தது. வீட்டின் மேற்கூரையை பார்த்தபோது துளை இருந்தது. எங்கிருந்தோ அந்த துப்பாக்கி தோட்டா, சிமெண்டு மேற்கூரையை துளைத்து கொண்டு வீட்டுக்குள் பாய்ந்து இருப்பது தெரிந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையிலான போலீசார், வீட்டுக்குள் இருந்த தோட்டாவை கைப்பற்றி சென்னை மயிலாப்பூரில் உள்ள தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜேஷ் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) பயிற்சி மையம் உள்ளது. அங்குள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது. அவர்கள் பயிற்சிக்கு பயன்படுத்திய சுமார் 50-ல் இருந்து 100 மீட்டர் வரை பாயக்கூடிய 9 எம்.எம். ரக தோட்டாதான், ராஜேஷ் வீட்டிலும் கிடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பயிற்சியின்போது சுட்ட துப்பாக்கி தோட்டா? தவறுதலாக ராஜேஷ் வீட்டின் சிமெண்டு மேற்கூரையை துளைத்து கொண்டு உள்ளே புகுந்ததா? என சந்தேகம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்கும், ராஜேஷ் வீட்டுக்கும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இடைவெளி உள்ளது. அத்துடன் துப்பாக்கி சுடும் பயிற்சி தெற்கில் இருந்து வடக்கு திசை நோக்கி நடைபெற்றது. ஆனால் ராஜேஷ் வீடு பயிற்சி மையத்தின் தெற்கு பகுதியில், அதாவது பயிற்சி நடைபெற்ற இடத்தின் பின்புறத்தில் உள்ளது. இதனால் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது பாய்ந்த தோட்டா அவரது வீட்டுக்குள் புகுந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் வீட்டுக்குள் பாய்ந்த தோட்டா எங்கிருந்து வந்தது? சி.ஆர்.பி.எப். பயிற்சி மையத்தில் வீரர்கள் பயிற்சியின்போது சுட்ட தோட்டா தவறி வந்ததா? அல்லது அந்த பகுதியில் வேறு யாராவது கள்ளத் துப்பாக்கியை பயன்படுத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்த ராஜேஷ் மீது தோட்டா பாய்ந்து இருந்தால் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். நல்லவேளையாக துப்பாக்கி தோட்டாவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னையில் இருந்து தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் நிர்மலாதேவி தலைமையில் 4 பேர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்