சமூகநீதி கூட்டமைப்பினர் திடீர் சாலை மறியல்
சமூகநீதி கூட்டமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம்டோல்கேட்:
திருச்சி நெ 1 டோல்கேட் ஒய் ரோட்டில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் காசிமாயதேவர், தமிழ்நாடு முத்தரையர் சங்க பொதுச்செயலாளர் மரு.பாஸ்கர், சீர்மரபினர் நலச்சங்க மாநில நிர்வாகி தேனி அன்பழகன், முத்தரையர் அரசியல் களம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா, கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் முனுசாமி கவுண்டர், குரும்ப கவுண்டர் பேரவை கணேஷ், பிச்சைவேல் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கொள்ளிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வரிசையில் நின்றன. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றபோது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 50 பெண்கள் உள்பட 200 பேரை ேபாலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
முன்னதாக நிருபர்களிடம் அய்யாக்கண்ணு கூறுகையில், ஒவ்வொரு சாதியிலும் அதிக அளவிலானவர்கள் இருப்பதை போன்ற தோற்றத்தை உண்டாக்கி, இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசை கேட்டால் மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், ஆனால் மத்திய அரசோ மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என்றும் கூறுகிறது. எனவே உண்மை நிலை ஊருக்கு தெரிய சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து சமூகநீதியை காப்பாற்ற வேண்டும், என்றார்.