துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
செம்பட்டு:
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளை இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் வழக்கம்போல் தொடங்கியுள்ளன. இந்நிலையில் மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணிக்கு திருச்சியில் இருந்து துபாய் நோக்கி செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 120 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு வயர்லெஸ் சாலை மற்றும் பந்தய சாலை பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
புறப்பட்டு சென்றது
இதனால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் நேற்று மாலை 3.45 மணிக்கு 122 பயணிகளுடன் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டு சென்றது.
இதில் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 120 பயணிகளுடன், நேற்று முன்தினம் அந்த விமானத்தில் பயணம் செய்ய வராமல் இருந்த 2 பயணிகளும், நேற்று விமான நிலையத்திற்கு வந்து அந்த விமானத்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.