கார்கள் மோதி விபத்து; 4 வாலிபர்கள் உடல் நசுங்கி சாவு
ஹாவேரி அருகே கார்கள் மோதி விபத்தில் 4 வாலிபர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பெங்களூரு:
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் 2 கார்களும் அப்பளம் போல நொறுங்கியது. இதன் காரணமாக 2 கார்களிலும் இருந்த 4 வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். தகவல் அறிந்ததும் ராணிபென்னூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு தாலுகா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணையில், பலியானவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் (வயது 34), லதீஸ் (32), சுரேஷ் (38), கேரள மாநிலத்தை சேர்ந்த சாஹல் (34) என்று தெரிந்தது. இதுகுறித்து ராணிபென்னூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.