பத்ரா மேலணை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

பத்ரா மேலணை திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-29 22:04 GMT
பெங்களூரு:

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

  பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக மத்திய மந்திரிசபை விரைவில் அங்கீகரிக்கும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கும். இதனால் சித்ரதுர்கா, துமகூரு கால்வாய்களில் நீர் விடப்படும். 337 ஏரிகளில் நீர் நிரப்பப்படும். இந்த தொகுதிக்கு நீர்ப்பாசன வசதி மட்டுமின்றி தொழில் வளர்ச்சியும் ஏற்படுத்தப்படும்.

  விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும். மும்பை-சென்னை தொழில் வழிப்பாதையில் வரும் தாவணகெரே, ஹாவேரி, உத்தரகன்னடா, தார்வார், பெலகாவி மாவட்டங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். ஒருபுறம் விவசாய புரட்சி, மற்றொருபுறம் தொழில் புரட்சியை ஏற்படுத்தி மத்திய கர்நாடக பகுதிக்கு நல்ல வளமான எதிர்காலம் உருவாக்கி தரப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

மேலும் செய்திகள்