ஜல் ஜீவன் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தாளவாடி அருகே ஜல் ஜீவன் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-04-29 21:19 GMT
தாளவாடி அருகே ஜல் ஜீவன் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
முற்றுகை
தாளவாடி ஊராட்சிக்கு உள்பட்ட மலைக்கிராமம் பாரதிபுரம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இந்த நிலையில் பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒன்று திரண்டு தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் அறையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இந்தத் திட்டத்தின் கீழ் புதிதாக குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் பழைய குடிநீர் குழாயில் இருந்து தங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் ஜல் ஜீவன் திட்ட பணிகள் முறையாக நடைபெறவில்லை. இந்த பணிகள் முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 
பரபரப்பு
அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் அளிக்கையில், ‘இதுபற்றி ஆய்வு செய்து புதிய குடிநீர் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சம்பவத்தால் தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்