கும்பகோணத்தில் பருத்தி சாகுபடி மும்முரம்

கும்பகோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பருத்தி சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-29 21:05 GMT
கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பருத்தி சாகுபடிக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பருத்தி சாகுபடி
கும்பகோணம் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு சில விவசாயிகள் கோடை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடை சாகுபடி செய்ய வசதி இல்லாத பிற விவசாயிகள் சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படாத மாற்று பயிர்களான உளுந்து, பயறு, எள், பருத்தி ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் கும்பகோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 
இதற்காக நிலங்களை உழுது தயார் படுத்தி விவசாயிகள் விதை விதைத்திருந்த நிலையில் தற்போது பருத்தி செடிகள் நன்கு வளர தொடங்கி உள்ளன. 
அறுவடை
பருத்தி பயிர் வளர குறைந்த அளவு தண்ணீரே போதுமானதாக இருப்பதால் மோட்டார் பம்பு வசதி இல்லாத விவசாயிகள் ஏராளமானோர் தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி பயிர்கள் 2 மாதங்களில் நன்கு வளர்ந்து வருகிற ஜூன் மாதம் முதல் அறுவடைக்கு தயாராகும்.
கடந்த முறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததால் இந்தமுறை ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
உரங்கள்
இதுகுறித்து பருத்தி நடவு செய்துள்ள விவசாயிகள் கூறுகையில்,இந்த கோடையில் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் அதிகம் தண்ணீர் தேவைப்படாத பருத்தி பயிரை சாகுபடி செய்துள்ளோம். பருத்தி நடவு செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்களில் முதல் பருவ அறுவடைக்கு தயாராகும். 
பருத்தி பயிருக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திபஞ்சு நல்ல விலைக்கு ஏலம் போனது‌. இதைப்போல  இந்த வருடமும் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பருத்தி சாகுபடி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்