பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை

எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.

Update: 2022-04-29 20:58 GMT
வல்லம்;
எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.
ஜி.கே.வாசன் எம்.பி. ஆறுதல்
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் அப்பர் சதய விழாவையொட்டி நடந்த தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உயிரழந்தோரின் குடும்பங்களுக்கு நேற்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது
பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை
எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்துவது அரசினுடைய கடமை. அரசை யாரும் குற்றம் சாட்டவில்லை என்று கூறினாலும் பொதுமக்களின் நலன் கருதி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
விபத்து நடந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரவில்லை என்றாலும் பொதுமக்களின் நலன் கருதி அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்மின் அழுத்த கம்பி தாழ்வாக சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்தனர். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மின்சாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் வரகூரில் மின்சார கம்பி மீது பஸ் உரசியதில் 4 பேர் உயிரிழந்தனர். எனவே எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு செயல்பட வேண்டும். 
மின்சார விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 
பின்னர் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்