ஏரிகள், வடிகால்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
ஏரிகள், வடிகால்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்;
ஏரிகள், வடிகால்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். பார்வையாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு
ராயமுண்டான்பட்டி வெ.ஜீவக்குமார்: குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் இந்த ஆண்டு உண்டா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும். கிராமப்பகுதிகளில் மின்வெட்டு உள்ளது. மும்முனை மின்சாரம் 20 மணிநேரம் வழங்க வேண்டும். உரவிலை நிர்ணயம் மற்றும் உர வினியோகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
கண்காணிப்பு குழு
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: பழைய மின் கம்பங்களை கண்டறிந்து அவற்றை மாற்ற வேண்டும்.
தஞ்சை செந்தில்குமார்: தூர்வாரும் பணிகளை எவ்வித ஊழல், முறைகேடு இல்லாமல் விரைந்து முடிக்க வேண்டும். இந்த பணியை கண்காணிக்க விவசாயிகள் அடங்கிய கண்காணிப்புக்குழுக்களை அமைக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
மதுக்கூர் சந்திரன்: மதுக்கூர் ஒன்றியத்தில் காத்தியநொடை ஏரி காணாமல் போய்விட்டது. கருப்பேரி, சிராங்குடி ஏரி, அண்டமிஏரி, புலவஞ்சி கருப்பூர் ஏரி, பெரியகோட்டை ஏரி ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கீழக்கோட்டை தங்கவேல்: ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆண்டாள் ஏரியின் மொத்த பரப்பளவு 251 ஏக்கர் ஆகும். தற்போது 70 ஏக்கர் மட்டுமே உள்ளது. மீதமுள்ள 181 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்: வடிகால்கள், ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. வரைபடங்களின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, வடிகால்கள், ஏரிகள் மீட்கப்பட்டு வருகின்றன. தூர்ந்து போன வடிகால்களை கூட தூர்வாரி வருகிறோம்.
உளுந்தை வாங்க யாரும் இல்லை
பொன்னவராயன்கோட்டை வீரசேனன்: நெல்லுக்கு மாற்றாக உளுந்தை சாகுபடி செய்தோம். உளுந்தை வேளாண் விற்பனை மையம் மூலம் கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நான் 6 ஏக்கர் சாகுபடி செய்தேன். ஆனால் உளுந்தை வாங்க யாரும் இல்லை.
கலெக்டர்: மாற்றுப்பயிராக உளுந்தை அறிவிக்கவில்லை. தரிசு நிலம் இருக்கக்கூடாது என்பதற்காக உளுந்து சாகுபடி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1,900 டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். பட்டுக்கோட்டை பகுதியிலும் உளுந்தை கொள்முதல் செய்து கொள்கிறோம்.
பாச்சூர் புண்ணியமூர்த்தி: நீர்மட்டம் வெகுஆழத்தில் சென்றதால் மின்மோட்டார் பளுவை அதிகரித்து புதிய மின்மோட்டார் பொருத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே இதற்குஅனுமதி அளிக்க வேண்டும்.