தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி
ரூ.1¾ கோடி பரிசு விழுந்திருப்பதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது.
சேலம்:-
தலைவாசல் அருகே உள்ள நத்தகரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 26). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 11-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் பரிசு விழுந்திருப்பதாகவும், இதனால் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், பரிசு தொகைக்கு சேவை கட்டணமாக ரூ.26 ஆயிரத்து 500 செலவு ஆகும் என்றும், அந்த கட்டணத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கூறப்பட்டு இருந்தது. இதனால் அதை உண்மை என்று நம்பிய கார்த்திகேயன் 4 தவணைகள் மூலமாக ரூ.2 லட்சத்து 1,500-ஐ சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவருக்கு தெரிவித்தபடி ரூ.1 கோடியே 75 லட்சம் பரிசுத்தொகை எதுவும் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.