வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி
தலைவாசல் அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.;
தலைவாசல்:-
தலைவாசல் அருகே காமக்காபாளையம் ஊராட்சி வேதநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மூத்த மகன் மணி (வயது 22). இவர் தலைவாசல் அருகே வடசென்னிமலை அரசு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கல்லூரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தலைவாசல் அருகே மும்முடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மணி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.