இரட்டை ரெயில் பாதையில் சோதனை ஓட்டம்

ஆரல்வாய்மொழி- வள்ளியூர் இடைேய இரட்டை ரெயில் பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது.

Update: 2022-04-29 20:08 GMT
ஆரல்வாய்மொழி, 
ஆரல்வாய்மொழி- வள்ளியூர் இடைேய இரட்டை ரெயில் பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. 
இரட்டை ரெயில் பாதை
தெற்கு ரயில்வேயில் திருநெல்வேலி-நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரெயில் நிலையங்களுக்கு இடையில் மின்மயமாக்கலுடன் இரண்டாவது ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மோட்டார் டிராலி மூலம் ஆய்வு செய்தார். 
இந்தநிலையில் நேற்று மாலையில் சுமார் 5.45 மணிக்கு ஆரல்வாய்மொழிக்கும் வள்ளியூருக்கும் இடையில் "ஸ்பீடு டிரயல்" எனப்படும் வேக பரிசோதனை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 
5 பெட்டிகள்
இதனையொட்டி நாகர்கோவில் இருந்து 5 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு ஆரல்வாய்மொழி 2 - வது நடைமேடையில் வந்தது. 
அப்போது பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள்  ரெயிலுக்கு மாலை அணிவித்தும் பூஜைகள் செய்தனர்.
பின்னர், சோதனை ஓட்டம் தொடங்கியது. 5 பெட்டிகளிலும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்த சோதனை ஓட்டத்தை பார்ப்பதற்காக அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ரெயில்கள் தாமதம்
இரட்டை ரெயில்பாதை ஆய்வுப்பணி காரணமாக நாள்தோறும் மாலை 5.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று 1 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக அதாவது 7.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இதேபோல் தினமும் மாலை 5.55 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று 1 மணி நேரம் 55 நிமிடம் தாமதமாக 7.50 மணிக்கு புறப்பட்டது. இதுபோல் நெல்லை, மதுரை மார்க்கமாக புறப்பட்டுச் செல்லும் ரெயில்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

மேலும் செய்திகள்