அரசு புறம்போக்கு நிலத்துக்கு கணினி பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கைது
போலி ஆவணங்களை தயார் செய்து அரசு புறம்போக்கு நிலத்துக்கு கணினி பட்டா கேட்டு வழக்கு தொடர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் கைது செய்யப்பட்டார்.;
பெரம்பலூர்
கணினி பட்டா
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இரூர் அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர், கடந்த 2020-ம் ஆண்டு இரூர் பெருமாள் கோவில் மலை அடிவார வடபுறத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலமான 1 ஏக்கர் 89 சென்ட் கல்லாங்குத்து நிலத்திற்கு கணினி பட்டா வழங்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவருக்கு நீதிமன்றம் ஆலத்தூர் தாசில்தார் விசாரணை செய்து கணினி பட்டா வழங்க உத்தரவிட்டது.
கைது
அதன் அடிப்படையில் தாசில்தார் விசாரணை செய்ததில், முத்துசாமி போலியான ஆவணங்களை தயார் செய்து அரசு புறம்போக்கு நிலத்துக்கு கணினி பட்டா கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து இரூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் (27) பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து முத்துசாமியை கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.