போலீசாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை கைது செய்ய சென்ற போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை கைது செய்ய சென்ற போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ேபாலீசார் சோதனை
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து விஜயகரிசல்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி, தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ரவிக்கண்ணன் (வயது 34) என்பவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது விஜயகரிசல்குளம் கிராம பொதுமக்கள் ரவி கண்ணனை கைது செய்து அழைத்து செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
அத்துடன் போலீசாரின் வாகனத்தை செல்லவிடாமல் சாலைகளில் குப்பை தொட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களால் சாலையை மறித்தனர்.
இருப்பினும் போலீசார் மாற்றுப்பாதையான கண்மாய் கரை வழியாக ரவி கண்ணனை இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்து செல்ல முயன்றனர் ஆனால் பெண்கள் செல்லவிடாமல் வழிமறித்தனர். இதுகுறித்த தகவலறிந்த சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் ஆகிேயார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு வந்துள்ளதால் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். முறையாக பட்டாசு தொழில் அனுமதி பெற்று செய்ய வேண்டும் என கூறினர்.
10 பேர் மீது வழக்கு
அத்துடன் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தை வருமாறு அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் வெம்பக்கோட்டை போலீஸ்நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலெக்டரை சந்திக்க சென்றனர்.
இதற்கிடையை அனுமதியின்றி பட்டாசு தயாரித்த ரவிக்கண்ணனை போலீசார் கைது செய்ததுடன், பணி செய்ய விடாமல் தடுத்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.