70 கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி
70 கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.;
சிவகங்கை,
70 கண்மாய்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதனரெட்டி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு, தோட்டக்கலைத்துறையின் துணை இயக்குனர் அழகுராஜா, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து கலெக்டர் பேசியதாவது:-
விழிப்புணர்வு"
வேளாண் பணிகளுக்கு வைகை அணையிலிருந்து நமது மாவட்டத்துக்கான பங்கீட்டு நீரை திறக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்துக் கால்வாய்கள், அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை பொறுத்தவரை சில கண்மாய்களில் அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணி நிறைவு பெற்றவுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
தற்போதைய சூழலில் நாடு முழுவதும் இயற்கை வேளாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நமது மாவட்டத்திலும் விவசாயிகள் இயற்கை வேளாண்மை குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
70 கண்மாய்களில்...
கிராமப்புறங்களில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணி, ஏற்கனவே பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் குறித்து விவசாயிகள் மனுவாக அளித்தால் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஆற்று மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். படமாத்தூர் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நமது மாவட்டத்தில் 70 கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.