முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தக்கோரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பெரம்பலூர்
ஆர்ப்பாட்டம்
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி-முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் நேற்று மாநில தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் அருண்குமார், பொருளாளர் இலக்கியச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் பாபுவாணன் கழகத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கழகத்தின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராஜ்குமார், ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் மணி, முன்னாள் மாவட்ட பொருளாளர் துரை ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
4 அம்ச கோரிக்கைகள்
ஆசிரியர்களுக்கு என்று தனியாக பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும். பணி நிரவல் கலந்தாய்வில் நீடு போஸ்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறை படுத்த வேண்டும். கடந்த 2 வருடங்களாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசே நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.