ரூ.38 லட்சம் மதிப்பில் வேளாண்மை விரிவாக்க மையம்
கச்சிராயப்பாளையத்தில் ரூ.38 லட்சம் மதிப்பிலான வேளாண்மை விரிவாக்க மையத்தின் கட்டுமான பணி தொடங்கியது.
கச்சிராயப்பாளையம்
வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள வேளாண்மை துறைக்கு சொந்தமாக அரசு விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து வேளாண்மை விரிவாக்க மையம் அமைப்பதற்கு தமிழக அரசு ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கியதை அடுத்து அதற்கான கட்டுமான பணி நேற்று தொடங்கியது. இதை பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். துணை வேளாண்மை இயக்குனர் சுந்தரம், உதவி இயக்குனர் கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர் சின்னப்பா, பேரூராட்சி துணைத் தலைவர் தண்டபாணி, உதவி பொறியாளர்கள் கீர்த்திகா, பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, திமுக நகர நிர்வாகிகள் முத்து, அர்ஜுனன, ஜெயவேல், கரிகாலன், தசரதன், சின்னதுரை, செல்வராஜ், ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் விதைப்பபண்ணை மேலாளர் நித்தியா நன்றி கூறினார்.