மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் பலி
சின்னதாராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது மகன் காயம் அடைந்தார்.
க.பரமத்தி,
வேன் மோதல்
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே சென்னிமலைப்பாளையத்தை சேர்ந்த கிட்டான். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 55). இவரது மகன் அறிவழகன் (32). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் தென்னிலை சென்றுவிட்டு மீண்டும் தங்களது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சின்ன தாராபுரத்தில் இருந்து கரூர் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (25) தனது ஆம்னி வேனில் தென்னிலைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சென்னிமலைபாளையம் அருகே வந்தபோது அறிவழகன், பூங்கோடி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பிரகாஷ் ஓட்டி வந்த வேன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் இருந்து தூக்கி வீசப்பட்ட பூங்கொடி, அறிவழகன் காயம் அடைந்தனர்.
பலி
இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூங்கொடி பரிதாபமாக இறந்தார்.
அறிவழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகிறார். இந்த விபத்து குறித்து சின்னதாரபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.