கரூரில் 105 டிகிரியை தாண்டிய வெயில்: பொதுமக்கள் அவதி

கரூரில் 105 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Update: 2022-04-29 18:42 GMT
கரூர்
கரூர், 
வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மதிய வேளையில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். கோடைமழை அவ்வப்போது பெய்து வந்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் கரூரில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து சூடுபிடிக்க ஆரம்பித்த வெயிலின் தாக்கம், சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.
 ஒருசில நாட்கள் மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஆனாலும் மற்ற நாட்களில் பகல் நேரத்தில் வெளியில் பொதுமக்கள் செல்லமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரூரில் நேற்று காலை முதலே வெயில் கொளுத்தியது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து கடுமையாக இருந்தது.
வியர்வையில் நனைந்தனர்
சாலைகளில் கானல்நீர் தெரிந்தது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் சாலைகளில் குடைபிடித்தப்படி சென்றனர். சிலர் தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டால் போர்த்தியபடியும் சென்றனர். வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி கொண்டு சென்றனர். 
மேலும் கடுமையான வெப்பத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் வியர்வையில் நனைந்தனர். கரூர் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி 101.3 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. நேற்றுமுன்தினம் 103.1 டிகிரியாக பதிவானது. இந்நிலையில் நேற்று அதையும் தாண்டி 105.8 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

மேலும் செய்திகள்