தக்கலை அருகே ஆலயத்தில் திருட முயன்ற கள்ளக்காதல் ஜோடி கைது
தக்கலை அருகே ஆலயத்தில் திருட முயன்ற கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே ஆலயத்தில் திருட முயன்ற கள்ளக்காதல் ஜோடியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
கிறிஸ்தவ ஆலயம்
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவில் பரலோக மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பகல் நேரத்தில் பொதுமக்கள் பிரார்த்தனை செய்ய வசதியாக திறந்திருக்கும்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த ஆலயத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாதா சொரூபத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை திருடி சென்றனர். இதையடுத்து ஆலயத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. அத்துடன் கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை ஆலய நிர்வாகிகள் தினமும் கண்காணித்து வந்தனர்.
கோவிலுக்குள் நுழைந்த ஜாேடி
இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஆலய நிர்வாகிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, பகல் வேளையில் ஒரு ஆணும், பெண்ணும் ஆலயத்துக்குள் நுழைந்து உண்டியல், சொரூபம் போன்றவற்றை சந்தேகத்திற்கிடமான முறையில் நோட்டமிடும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால், இந்த நபர்கள் மீண்டும் வரலாம் என ஆலய நிர்வாகிகள் கருதினர்.
இதையடுத்து ஆலயம் அருகில் உள்ளவர்களிடம் சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது நடமாடினால் உடனே தகவல் கொடுக்கும்படி கூறியிருந்தனர்.
பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
அதன்படி, நேற்று மதியம் அந்த ஆணும், பெண்ணும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஆலயத்துக்கு வந்தனர். அவர்கள் ஆலயத்துக்குள் நுழைந்து அங்கிருந்த நகை உள்ளிட்ட பொருட்களையும், ஆட்களின் நடமாட்டத்தையும் நோட்டமிட்டனர். தொடர்ந்து, ஆலயத்தில் மாதா சொரூபத்தில் அணிந்திருந்த நகையை திருட முயன்றனர்.
இதை கவனித்த மூதாட்டி ஒருவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் ெகாடுத்தார். உடனே நிர்வாகிகள் சிலர் ஆலயத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் அந்த ஆணும், பெண்ணும் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.
உடனே, பொதுமக்கள் திரண்டு சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். ெதாடர்ந்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து தக்கலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கள்ளக்காதல் ஜோடி
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆண் கருங்கல் அருகே உள்ள கப்பியறையை சேர்ந்த ஷாபு மோன் (வயது35) என்பதும், பெண் அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த நூர்ஜகான் (42) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்ட போது கையுறை, சுத்தியல் போன்றவை இருந்தது.
இவர்கள் ஜோடியாக சென்று குமரி மாவட்டத்தில் உள்ள பல ஆலயம் மற்றும் கோவிலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த ஆலயத்தில் திருட வந்த போது சிக்கி கொண்டனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டார் சவேரியார் ஆலயத்தில் உண்டில் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்கள். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும் திருட்டு சம்பங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைது
இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.