காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி ஆம்னி வேனில் கடத்தல்: 8 பேர் கைது
வெள்ளியணை அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை ஆம்னி வேனில் கடத்தி சென்ற 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வெள்ளியணை
காதல் திருமணம்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிபட்டியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற காளியப்பன் (வயது 22). இவர் பால் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஆலமரத்துபட்டியை சேர்ந்தவர் கோமதி (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில் கார்த்திக் மற்றும் கோமதி இடையே பழக்கம் ஏற்பட்டு இருவதும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் வேறு, வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலை பிரித்து விடுவார்கள் என கருதி கடந்த 26-ந்தேதி கார்த்திக் மற்றும் கோமதி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஆம்னி வேனில் கடத்தல்
பின்னர் பெற்றோர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் என கருதி புதுமண தம்பதிகள் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இரு வீட்டாரையும் போலீசார் அழைத்து பேசினர். அப்போது பெண் வீட்டார் எங்களுக்கும், கோமதிக்கும் இனிமேல் எந்த தொடர்பும் இல்லை என எழுதி கொடுத்துவிட்டு சென்று விட்டனர். இதனையடுத்து புதுமண தம்பதிகளை கார்த்திக் வீட்டார் ஏற்றுக்கொண்டு அழைத்து சென்றனர். புதுமணத்தம்பதிகள் ஏமூர் புதூரில் கார்த்திக்கின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் ஏமூர் புதூருக்கு ஆம்னி வேனில் வந்த மர்ம நபர்கள் புதுமண தம்பதிகளை கடத்தி சென்றனர்.
8 பேர் கைது
இதுகுறித்து வெள்ளியணை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமண தம்பதிகளை கடத்தி சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் கோமதியின் உறவினர்கள் வந்து புதுமண தம்பதிகளை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கோமதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி (45), தாய்மாமா கோவிந்தராஜ் (36), அர்ஜுனன் (29), முருகேசன் (44), சண்முகம் (35), செல்வம் என்கிற குப்புசாமி (46) பாலசுப்பிரமணி (36), 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும் புதுமணத் தம்பதியையும் போலீசார் மீட்டனர்.