குமரியில் இடி-மின்னலுடன் பலத்த மழை
குமரியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தக்கலையில் 32.3 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
திருவட்டார்,
குமரியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தக்கலையில் 32.3 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
இடி-மின்னலுடன் மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மாவட்டம் முழுவும் இடியும், மின்னலுமாக இருந்தது.
அதைத்தொடர்ந்து திருவட்டார், குலசேகரம், ஆற்றூர், சிதறால், மாத்தார், மாத்தூர், சித்திரங்கோடு, வேர்க்கிளம்பி, திருவரம்பு, இட்டகவேலி, தச்சூர், புத்தன்கடை, புலியிறங்கி, திற்பரப்பு, பூவன்கோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இடி-மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்த மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினார்கள்.
திற்பரப்பு அருவி
மேற்குத்தொடச்சி மலையையொட்டிய கோதையார், குற்றியார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைப்பகுதிகளிலும் மழை பெய்தது.
மலையோரப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருப்பதால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் திற்பரப்பு அருவியின் அனைத்து பகுதிகளிலும் பாறை தெரியாத அளவுக்கு வெள்ளம் பாய்கிறது.
32.3 மி.மீ. மழை
குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தக்கலை பகுதியில் 32.3 மி.மீ. மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-
சிற்றார் 1- 6, பேச்சிப்பாறை- 11.4, பெருஞ்சாணி- 4, குளச்சல்- 3, இரணியல்- 26, மாம்பழத்துறையாறு- 1.2, கோழிப்போர்விளை- 15, முள்ளங்கினாவிளை- 24.6 என பதிவாகி இருந்தது.