தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் குறைகள் பகுதி

Update: 2022-04-29 18:28 GMT

 ஏரியில் கரும்புக்கழிவுகள் கலப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூர் பெரிய ஏரியில் மீன் வளர்ப்புக்காக ஏலம் எடுத்தவர்கள் ஏரியில் ரசாயனம் கலந்த கரும்புக் கழிவுகளை ஏரி நீரில் கலக்கிறார்கள். ரசாயனம் கலந்த ஏரி நீரை அப்பகுதியில் மேயும் ஆடு மாடுகள் குடிப்பதால் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏரிநீர் ஊற்று பொதுமக்களுக்கு வினியோகிக்கும் தண்ணீருடன் கலந்து வருவதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்க களம்பூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவேந்திரன், களம்பூர்.

விளையாட்டு அரங்குக்கு சாலை வசதி செய்யப்படுமா?

  காட்பாடியில் ரூ.16 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். காட்பாடி ராணுவ கேன்டீன் அருகில் கட்டப்பட்ட இந்த விளையாட்டு அரங்குக்குச் செல்ல சாலை வசதி செய்யப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -பி.துரை, கல்புதூர்.

பழைய சாலையை அப்புறப்படுத்த ேவண்டும்

  அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வாணியம்பேட்டையில் இருந்து நாகாலம்மன் நகர் வரை சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பழைய சாலைைய அப்புறப்படுத்தி விட்டு புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டி ஏற்கனவே இருந்த உயரத்திலேயே சாலை போட வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால் பழைய சாலையை அகற்றாமல் அதன் மீதே ஜல்லிக்கற்களை கொட்டி வீடு மட்டத்தில் இருந்து 2 அடி உயரத்துக்கு சாலை அமைக்கிறார்கள். இது, மக்களுக்கு சிரமாக உள்ளது. சாலையை உயர்த்தி போடாமல் ஏற்கனவே இருந்த உயரத்தில் போட ே்வண்டும்.
  -கண்ணையன், அரக்கோணம்.

கால்வாய் தூர்வாரப்படுமா?

  வேலூர் சத்துவாச்சாரி 2-வது மண்டலத்தில் பாலாற்றங்கரை ஓரத்தில் நுண் உரம் செயலாக்க மையம் உள்ளது. அதன் எதிரில் உள்ள பாலாற்றுக்குச் செல்லும் கால்வாய் புத்தர் மண்டி தூர்ந்துபோய் கிடக்கிறது. கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -விமல், வேலூர்.

போக்குவரத்து விதி மீறிய பயணம்

  திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலையில் இருந்து ஜோலார்பேட்டையை ேநாக்கி போக்குவரத்து விதிமுறைகளை மீறி சரக்கு வேன் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏற்றிச்சென்றது. சரக்கு வேன்களில் பொதுமக்களை ஏற்றி செல்வதை போலீசார் தடுக்க வேண்டும்.
  -குமரன், ஜோலார்பேட்டை.

தரமான கம்பிகள் அமைக்கப்படுமா?

  வேலூர் அருகே வள்ளலார் பி.எப். அலுவலகம் அருகே ஓயாசிஸ் முதல் தெரு உள்ளது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் அமைக்கப்பட்ட நடைபாதை தடுப்புக்கம்பிகள் உடைந்து கிடக்கிறது. பணிகள் முடிவடையாத நிலையில் கம்பிகள் உடைந்து கிடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரமான கம்பிகளை அமைக்க வேண்டும்.

  -ஜெய்சங்கர், வேலூர்.

 மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி

  வேலூர் நகரம் முழுவதும் ஸ்மார்ட் திட்டப்பணிகள் நடந்து வருவதால், தெருக்கள் குண்டும் குழியுமாகவும், பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன. தற்போது வெயில் காரணமாக தோண்டப்பட்ட மண் தூசு மண்டலமாக மாறி விட்டது. இதனால் வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் தூசு மண்டலத்தில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறுகிறது. சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே ஒண்டி மாங்காய் மரம் பகுதியில் ஏற்பட்ட தூசியிலால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
  -மோகன்தாஸ், வேலூர்.

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

  பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா மலைக் கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்வோர் எனப் பல தரப்பினரும் அருகில் உள்ள பேரணாம்பட்டு நகரத்துக்கு தினமும் பஸ்சில் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு காலை 8 மணியளவில் ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. அதன்பிறகு 5 மணிநேரம் வரை பஸ்சுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு, தனியார் பஸ்களை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ம.தங்கராஜ், அரவட்லா.

கால்வாய்களை தூர்வார வேண்டும்

  வேலூர் மாநகராட்சி வார்டு எண்-42 கஸ்பா சப்ரகார தெருவில் குப்ைபகளை ஊழியர்கள் சரியாக அகற்றுவது இல்லை. கழிவுநீர் கால்வாய்களை சரியாக தூர்வாருவது இல்லை. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -எம்.ராஜ்பாபு பானுநந்தினி, வேலூர்.

கால்வாய் மேலே மூடி போட வேண்டும்

  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ராஜாஜி தெரு பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு சிலாப் போட்டு மூட வேண்டும். கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -ஆட்டோ க.முத்து, போளூர்.
(படம்) போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

  வேலூர் சத்துவாச்சாரி 2-பேஸ் பகுதியில் 2, 5-வது பிரதான சாலையில் மரக்கன்றுகள் நட்டு, அதை ஆடு, மாடு மேயாமல் இருக்கவும், பாதுகாக்கவும் இரும்புக்கூண்டு அமைத்திருந்தனர். அதை, மர்மநபர்கள் யாரோ இரவில் திருடிச்சென்று விட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
  -கிருஷ்ணன், வேலூர்.
  
  
  
  
  

மேலும் செய்திகள்