குழித்துறையில் சாலைகளை சரியாக மூடாத குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கண்டனம்;நகராட்சி கூட்டத்தில் தலைவர் குற்றச்சாட்டு
குழித்துறையில் சாலைகளை சரியாக மூடாத குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்து நகராட்சி கூட்டத்தில் தலைவர் பொன் ஆசைதம்பி பேசினார்.
குழித்துறை,
குழித்துறையில் சாலைகளை சரியாக மூடாத குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்து நகராட்சி கூட்டத்தில் தலைவர் பொன் ஆசைதம்பி பேசினார்.
குழித்துறை நகராட்சி கூட்டம்
குழித்துறை நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆணையர் ராமதிலகம், பொறியாளர் பேரின்பம், சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், நகராட்சி மேலாளர் ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் நகராட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசினர். அதன் விவரம் வருமாறு:-
குடிநீர் வடிகால் வாரியத்திற்கு கண்டனம்
சர்தார் ஷா:-மார்த்தாண்டம் மாதவவிலாசம் பள்ளி முன்பு குடிநீர் குழாய் பதிக்க ரோட்டில் குழி தோண்டி அதனை மூடாமல் அப்படியே போட்டுள்ளனர். இதனால் மார்த்தாண்டம் ஆர்.சி. தெரு பகுதியில் 7 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
தலைவர் பொன் ஆசைத்தம்பி:- இத்தகைய குடிநீர் பிரச்சினை குழித்துறை நகராட்சியில் உள்ள 21 வார்டிலும் உள்ளது. ஒழுங்காக இருக்கும் சாலைகளை குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழிகள் தோண்டி, அதனை சரியாக மூடாமல் சென்று விடுகிறார்கள். இதனால் அந்த பகுதி மேடு, பள்ளங்கள் உருவாகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. குடிநீர் வடிகால் வாரியத்தின் இத்தகைய செயல்பாடுகள் கண்டனத்திற்கு உரியதாகும். குடிநீர் வடிகால் வாரியம் இப்படி செய்யாமல் ஒழுங்காக செயல்பட்டால் குழித்துறை நகராட்சி பகுதியில் தண்ணீர் பிரச்சினையே இருக்காது.
கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ரீகன்:- மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து ஆம்னி பஸ்களையும் இயங்க செய்ய வேண்டும். அனைத்து அரசு பஸ்களும் பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டும். மார்த்தாண்டம் காய்கறி மார்க்கெட் வேலை தொடங்கும் போது அங்குள்ள காய்கறி வியாபாரிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்லின் கெனில்:- மார்த்தாண்டம் கமிஷன் மீன் மார்க்கெட்டில் வேலை செய்பவர்களுக்கு இழப்பு ஏற்படாதவாறு அங்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த சமயத்தில் கவுன்சிலர் சர்தார்ஷா பேசுகையில், அதிகாரிகள் வார்டுகளுக்கு செல்லும் போது சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது மேலும் சில கவுன்சிலர்கள் கடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகத்தின் போது இது பற்றி முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை என்று ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தலைவர் பதில்
அப்போது உறுப்பினர் ஜூலியட் மெர்லின் ரூபி குறுக்கிட்டு உறுப்பினர்கள் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து தலைவர் எதுவும் குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த தலைவர் பொன் ஆசைத்தம்பி, நான் இதற்கு முன்பு இந்த நகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கின்றேன். அப்போது, கம்யூனிஸ்டு நிர்வாகம் எங்களுக்கெல்லாம் பேச வாய்ப்பு தருவதில்லை. ஆனால் இப்போது அதே தவறை நான் செய்யப்போவதில்லை என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.