பெத்ததாளப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
பெத்ததாளப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி வெங்கடேஷ் தலைமையில் நடந்த இந்த முகாமை செல்லகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு கண், காது, மூக்கு, தொண்டை, தொழு நோய், காச நோய், கர்ப்பிணிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய பரிசோதனை மேற்கொண்டு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவ உதவித்தொகை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட நல உதவிகளை செல்லகுமார் எம்.பி. வழங்கினார்.
இதில் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சேகர், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார தலைவர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.