அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரத்தை சேர்ந்த அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விசாரணை அதிகாரியான ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரில் ஆஜரானார். அவரிடம் அமைச்சர் பொன்முடி தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.
இதையடுத்து இவ்வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.