குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்கள் வாக்குவாதம் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்கள் வாக்குவாதம் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இருக்கை பிரச்சினை
குமாரபாளையம் நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய கண்ணன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சசிகலா முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணி, புருஷோத்தமன் ஆகியோர் முன்புறம் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தனர். அப்போது தலைவர், கவுன்சிலர்களுக்கு வார்டு வரிசையாக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டு உறுப்பினர்கள் அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர வேண்டும் என்று கூறினார். அதற்கு கவுன்சிலர் பாலசுப்ரமணி பகுதியாக பிரித்து அமர வைக்க வேண்டும் என்று கூறினார். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கும், தலைவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
அப்ேபாது 3-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் வேல்முருகன் இருக்கை பிரச்சினை பற்றியே பேசி நேரத்தை வீணடிப்பதாகவும், மற்ற கவுன்சிலர்கள் தங்களது குறைகளை பேச முடியவில்லை என பேசினார். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்பிரமணியத்திற்கும், சுயேச்சை கவுன்சிலர் வேல்முருகனுக்கும் இடையே வாய்த்தகராறு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வெளிநடப்பு
அவர்களை துணைத்தலைவர் வெங்கடேஷ் சமாதானம் செய்தார். ஆனால் அதையும் மீறி பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களும், வேல்முருகனுக்கு ஆதரவாக சுயேச்சை மற்றும் சில தி.மு.க. கவுன்சிலர்களும் ஆதரவாக நின்று அடுத்தடுத்து பேசினர். ஒரு கட்டத்தில் வார்த்தைகள் அதிகரிக்கவே கூட்டம் முடிந்துவிட்டது என தலைவர் அறிவித்தார்.
அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சத்தியசீலனுக்கும் கதிரவன் சேகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் வெளிநபர்கள் மன்றத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் தனித்தனியே நகர்மன்ற தலைவர் மீது குற்றம் சுமத்தி வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.