வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் அனுப்பி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சம் அபேஸ்
வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டதாக குறுந்தகவல் அனுப்பி விவசாயியிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் கலைவாணன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56), விவசாயி. இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த 24-ந் தேதியன்று காலை 11.30 மணியளவில் ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில் உங்களுடைய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டுமெனில் பான் கார்டு எண்ணை பதிவேற்றம் செய்யுமாறும் குறிப்பிட்டிருந்ததோடு அந்த குறுந்தகவலில் ஒரு லிங்க்கும் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி சரவணன், தான் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்துதான் இந்த குறுந்தகவல் வந்துள்ளது என்று நம்பி அந்த லிங்கிற்குள் சென்று தன்னுடைய பெயர், பான் கார்டு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்துள்ளார்.
பின்னர் தனது செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்ணையும் அதில் பதிவு செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் சரவணனின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 998-ஐ யாரோ மர்ம நபர் நூதன முறையில் எடுத்து விட்டதாக சரவணனின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர், உடனே இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.