காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண் பலி; நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
எட்டயபுரம் அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு...
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மனைவி திலகா (வயது 43). இவர்களுடைய மகள்கள் சினேகா (19), காவியா (17), மகன் லோகேஷ் (21). இவர்களின் உறவினர் பன்னீர்செல்வம் (44).
இவர்கள் 5 பேரும் தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு காஞ்சீபுரத்தில் இருந்து காரில் புறப்பட்டு வந்தனர். காரை திருவாரூர் மாவட்டம் போரூரைச் சேர்ந்த மிலன் சதீஷ் (38) ஓட்டினார்.
பெண் சாவு
நேற்று அதிகாலையில் எட்டயபுரம் அருகே தாப்பாத்தி கிராமம் அருகே வந்தபோது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென்று பாய்ந்து ஓடி வந்தது. இதனால் அந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரை மிலன் சதீஷ் திருப்பினார்.
அப்போது சாலையோரம் உள்ள மண்திட்டு மீது கார் மோதி கவிழ்ந்தது. இதில் கார் கதவு திறந்ததில் திலகா, காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார். மற்ற 5 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, திலகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இ்ந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.