பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியான 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், இதுசம்பந்தமான வெள்ளை அறிக்கை கேட்ட சங்கத்தின் மாநில தலைவர் சரவணனின் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் சரவணன் கண்டன உரையாற்றினார். இதில் மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் அசோகன், சக்திவேல், ராஜூ, தாகப்பிள்ளை, சிவப்பிரகாசம், வேலாயுதம், அழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.