விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைக்க 50 சதவீத மானியம்

விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-04-29 16:40 GMT
கடலூர், 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பி.வி.சி. குழாய் அமைத் தல் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாய நிலத்தில் நீர்ப்பாசன வசதிக்காக பி.வி.சி. குழாய் அமைக்க திட்டத்தொகையில் 50 சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்க திட்டத் தொகையில் 50 சதவீதம், அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தாட்கோ இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சாதிச்சான்று, குடும்ப ஆண்டு வருவாய் சான்று, ஆதார் அடையாள அட்டை, பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற விலைப்புள்ளி, நிலத்திற்கான ஆவணங்கள் போட்டோ ஆகிய விவரங்களுடன், ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவராக இருந்தால், www.application.tahdco.com என்ற இணைய தள முகவரியிலும், பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவராக இருப்பின் www.fast.tahdco.com என்ற இணைய தள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டம் தொடர்பாக மேலும் விவரங்கள் பெற கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

மேலும் செய்திகள்