ஆலங்காயத்தில் எரிந்த நிலையில் சுடுகாட்டில் பிணமாக கிடந்த அரசு பஸ் டிரைவர்

ஆலங்காயத்தில் அரசு பஸ் டிரைவர் பாதி எரிந்த நிலையில் சுடுகாட்டில் பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-29 16:28 GMT
வாணியம்பாடி

ஆலங்காயத்தில் அரசு பஸ் டிரைவர் பாதி எரிந்த நிலையில் சுடுகாட்டில் பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ் டிரைவர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த கொங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவரது தந்தை போக்குவரத்து கழகத்தில் வேலைபார்த்து வந்தார். சமீபத்தில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, ராஜ்குமாருக்கு வாரிசு அடிப்படையில் டிரைவர் பணி கிடைத்துள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை அவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

எரிந்த நிலையில் பிணம்

மாலை 6 மணி அளவில் ஏரிக்கரை பகுதிக்கு சென்றவர்கள் அங்கு நெடுமியூர் ஏரி அருகில் உள்ள சுடுகாட்டில் பாதி உடல் எரிந்த நிலையில் ராஜ்குமார் பிணமாக இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை யாரும் எரித்து கொலை செய்தார்களா?, தீக்குளித்து அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்