தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-04-29 16:00 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையோரத்தில் குவியும் குப்பை
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் ரெயில்வே கேட் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹரி, காந்திகிராமம்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
பழனியை அடுத்த மானூரில் உள்ள பிரதான சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே மானூர் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபாஜி, மானூர்.
சாலையில் பரவி கிடக்கும் ஜல்லிக்கற்கள்
ஒட்டன்சத்திரம் தாலுகா தா.புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டாலின் நகரில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சாலையை சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பி வைக்கப்பட்டன. அதன் பின்னர் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது வரை தார்சாலை அமைக்கப்படவில்லை. ஜல்லிக்கற்களும் சிதறி கிடக்கின்றன. இதனால் விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், தா.புதுக்கோட்டை.
பள்ளத்தால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
பழனியை அடுத்த ஆயக்குடி வாரச்சந்தை பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமேஸ்வரன், ஆயக்குடி.

மேலும் செய்திகள்