பொருட்கள் வழங்குவதில் குளறுபடி ரேஷன் கடையை மூடிய ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு
கூடலூர் அருகே பொருட்கள் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் ரேஷன் கடையை ஊராட்சி மன்ற தலைவர் மூடினார்.
கம்பம்:
ரேஷன் கடையில் குளறுபடி
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சியில் 7-ம் நம்பர் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன்கடையின் மேற்கூரையில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக ரேஷன்கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாகவும், பொருட்களை கூடுதல் விலையில் விற்பனை செய்வதாகவும், ரேஷன் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி செய்வதாகவும் ஊராட்சி மன்றத்தலைவர் பொன்னுத்தாயிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கடை மூடல்
இதையடுத்து ஊராட்சிமன்ற தலைவர் இன்று ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களிடம் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் குறித்து கேட்டார். இதற்கு கடை ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதைத்தொடர்ந்து கடையில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு சமுதாய கூடத்தின் கதவை இரும்பு கம்பியால் வெல்டிங் செய்து யாரும் திறக்க முடியாத அளவிற்கு கடையை ஊராட்சி மன்ற தலைவர் மூடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் உத்தமபாளையம் வட்டவழங்கல் அலுவலர் பாண்டிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும், ரேஷன் பொருட்கள் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் குறித்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து வெல்டிங் செய்து மூடப்பட்ட கதவுகள் திறக்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வினியோகிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர் உத்தரவிட்டார்.