மின்னல் தாக்கி 2 பேர் சாவு
கர்நாடகத்தில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று விஜயநகர், ராய்ச்சூர், தாவணகெரே, பல்லாரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. குறிப்பாக பல்லாரி, விஜயநகர் மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சாலையில் விழுந்து கிடந்த ஆலங்கட்டிகளை எடுத்து சிறுவர்கள் விளையாடினார்கள்.
இந்த நிலையில், ராய்ச்சூர் மாவட்டத்தில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் லிங்கசுகுர் அருகே உள்ள கிராமத்தைசேர்ந்த பசப்பா (வயது 30) என்பவா் பலியானார். இதுபோல், விஜயநகர் மாவட்டம் ஹகரி பொம்மனஹள்ளி தாலுகா சந்திரபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (32). இவரும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்து விட்டார்.
பல்லாரி மாவட்டத்தில் பெய்தமழைக்கு 67 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால், வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பெங்களூரு உள்பட பல மாவட்டங்களில் நேற்றும் பரவலாக நல்ல மழை பெய்தது.