430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.;

Update: 2022-04-29 14:56 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிராம சபை கூட்டங்கள் 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான நாளை(ஞாயிற்றுக்கிழமை) கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சுகாதாரம், வளர்ச்சி திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு தடை செய்தல், முன் மாதிரி கிராமமாக உருவாக்குதல், நமக்கு நாமே திட்டம், அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது. 
திட்ட பணிகள் குறித்து 
கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்ட பணிகள் குறித்து விவாதித்து  கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்