கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி: சுற்றுலா பயணிகளை கவர காய்கறி சிற்பங்கள்
கோத்தகிரி நேரு பூங்காவில் நடக்கும் 2 நாட்கள் காய்கறி கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவர காய்கறி சிற்பங்கள், அரங்குகள் அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசினார்.
கோத்தகிரி
கோத்தகிரி நேரு பூங்காவில் நடக்கும் 2 நாட்கள் காய்கறி கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவர காய்கறி சிற்பங்கள், அரங்குகள் அமைக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் வருகிற மே மாதம் கோடை விழா நடைபெறுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக 7 மற்றும் 8-ந் தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் காய்கறி கண்காட்சி நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:- நேரு பூங்காவில் நடைபெற உள்ள காய்கறி கண்காட்சியில் பங்கேற்கும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டியது அவசியம்.
காய்கறி சிற்பங்கள்
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காய்கறி சிற்பங்கள் மற்றும் சிறப்பான அரங்குகளை அமைக்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை' திட்டம் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.