நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
ஊட்டி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தது. இதை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 30-ந்தேதி (சனிக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது.
இதில் 249 நிலையான தடுப்பூசி முகாம்கள் மற்றும் 20 நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதன்படி ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு தகவல் பதிவாளர், 2 அங்கன்வாடி பணியாளர்கள் என 4 பணியாளர்கள் ஒரு முகாமில் இருப்பார்கள். மொத்தமாக 269 முகாம்களுக்கு 1076 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். எனவே நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.