சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த நிறுவனங்களுக்கு சீல்
மதுரையில் சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
மதுரை,
மதுரையில் சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
புகார்
சிகரெட் மற்றும் சிரிஞ்ச் வடிவில் வடிவமைக்கப்படும் மிட்டாய்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் இதையும் மீறி ஒரு சில மாவட்டங்களில் சிகரெட் மிட்டாய்கள் விற்பனையில் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதிலும் சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் உத்தரவின் பேரில் சிறப்பு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 15-க்கும் மேற்பட்ட கடைகளில் சிகரெட், சிரிஞ்ச் மிட்டாய்களுக்கான மாதிரிகள் சேகரிக்கப் பட்டது.
அதிரடி சோதனை
இதுகுறித்து, விற்பனையாளர்களிடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்லூர், ஜெய்ஹிந்துபுரம் ஆகிய பகுதிகளில் சிகரெட் மிட்டாய்கள் தயாராகி விற்பனைக்கு வருவது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் அங்கு உள்ள 2 நிறுவனங்களில் சிகரெட் மற்றும் சிரிஞ்ச் வடிவ மிட்டாய்கள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த 2 நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர்.