கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் மரணம்
கல்பாக்கத்தில் இயங்கி வரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் மாரடைப்பு காரணமாக ஏப்ரல் 27ம் தேதி உயிரிழந்தார்.
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் அருண்குமார் பாதுரி (வயது 65), இவருக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அணுபுரத்தில் உள்ள அரவது வீட்டில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை கல்பாக்கம் அணுமின் நிலைய ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவர் கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
பின்னர் மும்பை அணு சக்தி கழகம் இவரை இந்திய அணுசக்தி துறை அலோசகராக நியமித்தது. மேலும் கல்பாக்கத்தில் உள்ள பாபா பயிற்சி பள்ளியின் தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது உடலுக்கு அணுமின் நிலைய மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் கருப்பு பட்டை அணிந்து ஊர்வலமாக சென்று அவரது வீட்டில் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். கல்பாக்கத்தை அடுத்த வாயலூரில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.